வழிபாடு
கும்பகோணம் ஜலசந்திரமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

கும்பகோணம் ஜலசந்திரமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2022-01-21 07:58 GMT   |   Update On 2022-01-21 07:58 GMT
28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் ஜலசந்திரமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் பாணாதுறை கீழவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற ஜலசந்திரமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 18-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

மூலவர் விமான கலசம் மற்றும் 11 ராஜகோபுர கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையடுத்து ஜலசந்திரமாரியம்மனுக்கு விசேஷ கலசாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News