வழிபாடு
வரதராஜ பெருமாள்

கடலூரில் 23-ந் தேதி நடக்கிறது வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-01-20 09:02 GMT   |   Update On 2022-01-20 09:02 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருக்கோவிலூர் ஜீயர் தேகளீச ராமானுஜாசார்ய சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடந்து வந்தது.

இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மற்றும் 2-ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதியும், 22-ந்தேதி 3 மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜையும், விசேஷ திருமஞ்சனமும் நடக்கிறது.

சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணி அளவில் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை கோ, கஜ பூஜை, 5-ம் கால ஹோமம், யாத்ரா தானம், கும்பங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கும். கும்பாபிஷேகத்தை திருக்கோவிலூர் ஜீயர் தேகளீச ராமானுஜாசார்ய சுவாமிகள், சோளிங்கர் கந்தாடை சண்டாமாருதம் குமாரதொட்டையாச்சாரியார் சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு, சி.வெ.கணேசன், ஐயப்பன் எம்.எல்.ஏ. மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள், உற்சவதாரர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News