வழிபாடு
பழனி முருகன் கோவிலுக்கு படிப்பாதை வழியாக சென்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்

Published On 2022-01-12 06:37 GMT   |   Update On 2022-01-12 06:37 GMT
பழனி டவுன், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதேநேரத்தில் கொரோனா பரவல் காரணமாக தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல் பழனிக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நேற்று 2-வது நாளாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக பாதயாத்திரையாக வந்த பக்தர்களும் பஸ் ஏறி பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றில் கூடுவதை போல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

பழனி டவுன், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் தரிசன பாதைகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் காரணமாக பழனி அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிரோன் கேமரா மூலம் பஸ்நிலையம், அடிவாரம் ஆகிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டது. இதனை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

தைப்பூசத்தை முன்னிட்டு வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவ்வாறு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தனர். பஸ்கள் பஸ்நிலையத்துக்கு வந்தபோது முண்டியடித்து பஸ்களில் ஏறினர். இதனால் பஸ்நிலையத்தில் கடும் நெரிசல் காணப்பட்டது.

பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 2 நாட்களாக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிந்தனர். கூட்டம் காரணமாக நேற்று முதல் நாளை (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.

பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகிய இடங்களில் புனித நீராடுகின்றனர். மேற்கண்ட நீர்நிலைகளில் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க குறிப்பிட்ட தூரத்துக்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு உள்ளன.

தற்போது பழனிக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளத்தில் நீராடும் போது, ஆபத்தை உணராமல் தடுப்பு கம்பியை தாண்டி செல்கின்றனர். எனவே இடும்பன்குளம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News