வழிபாடு
கருவறையில் பூமிக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்ட நவதானிய சிலையை படத்தில் காணலாம்.

பூமிக்குள் இருந்த நவதானிய சிலை வெளியே எடுப்பு: 15 ஆண்டுகள் ஆகியும் சிதிலம் அடையாததால் பக்தர்கள் பரவசம்

Published On 2022-01-06 06:48 GMT   |   Update On 2022-01-06 06:48 GMT
திண்டுக்கல்லில் காளியம்மன் கனவில் கூறியதால் கருவறையில் பூமிக்குள் இருந்த நவதானிய சிலை 15 ஆண்டுகள் கழித்து வெளியே எடுக்கப்பட்டது.
திண்டுக்கல் சோலைஹால் மார்க்கெட் குமரன்தெருவில் 250 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முன்பு நவதானியம், மூலிகை மற்றும் அத்திமரத்தூள் ஆகியவற்றால் செய்த காளியம்மன் சிலையை வைத்து வழிபாடு செய்தனர்.

நவதானியத்தால் உருவான சிலை என்பதால், அபிஷேகம் செய்ய முடியவில்லை. ஆனால் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்பது பக்தர்கள் விரும்பினர். இதையடுத்து நவதானிய சிலையை கருவறைக்கு கீழே பூமிக்குள் வைத்து விட்டு, அதற்கு மேலே கல் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். மேலும் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு சிவனடியார் உள்பட 3 பேரின் கனவில் காளியம்மன் தோன்றி இருக்கிறார். அப்போது கருவறையில் பூமிக்குள் இருக்கும் தன்னை வெளியே எடுத்து வழிபாடு நடத்தும்படி கூறியிருக்கிறார்.

அதை அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர், பூ போட்டு காளியம்மனிடம் குறி கேட்டனர். அதில் காளியம்மன் உத்தரவு கொடுத்ததால், யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று நவதானிய சிலை வெளியே எடுக்கப்பட்டது.

அப்போது 15 ஆண்டுகள் பூமிக்குள் இருந்தாலும் நவதானிய சிலை சிதிலம் அடையாமல் அப்படியே இருந்தது. அதை பார்த்து வியந்த பக்தர்கள் பரவசம் அடைந்து அம்மனை வழிபட்டனர். ஒருசில பெண்கள் சாமி வந்து ஆடினர். இதை அறிந்து ஏராளமானோர் பழமையான காளியம்மன் சிலையை ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
Tags:    

Similar News