சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் சுருட்டப்பள்ளியில் உள்ள சர்வமங்கல சமேத பள்ளிகொண்டேஸ்வரசாமி கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. அதையொட்டி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நந்தீஸ்வரருக்கும், வால்மிகீஸ்வரசாமிக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து உற்சவர்கள் காளை வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரதோஷ வழிபாட்டில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முனிசேகர்ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.