ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-10-06 03:15 GMT   |   Update On 2021-10-06 03:15 GMT
மகாளய அமாவாசையைெயாட்டி சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் காலையிலிருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாத யாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து கோவில் முன்புறம் தீபமேற்றி வழிபட்டனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும், காலை 7-15 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு பால், தயிர், விபூதி, மஞ்சள் மற்றும் திரவிய பொடிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 7-15 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் வழியாக வலம் வந்து மூலஸ்தானத்தை சென்றடைந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன புறப்பாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதேபோல, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன.
Tags:    

Similar News