ஆன்மிகம்
கள்ளழகர்

கள்ளழகருக்கு 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம்

Published On 2021-08-24 08:01 GMT   |   Update On 2021-08-24 08:01 GMT
கள்ளழகர் கோவிலில் திருப்பவுத்திர திருவிழா நடந்தது. இதில் 108 கலசங்களில் நூபுர கங்கை தீர்த்தத்தில் சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்ற பெருமை உடையது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும் திருப்பவுத்திர திருவிழா தனி சிறப்புடையதாகும். இந்த திருவிழா கடந்த 18-ந் தேதி அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டப வளாகத்தில் மேளதாளம் முழங்க தொடங்கியது.

இங்குள்ள மண்டபத்தில் உற்சவர் கள்ளழகர் சுந்தரராச பெருமாள் எழுந்தருளினார். அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப் பட்டது. அதில் தேங்காய், வாழை பழங்கள், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள், அழகர் மலை உச்சியில் பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு நூல் மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சர விளக்கு பூஜைகளும், திருமஞ்சனமும், அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தது. அதன்பின்னர் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த பட்டு நூல் மாலைகள் மூலவர் சுவாமி, தேவியர்களுக்கும், உற்சவர் கள்ளழகர், தேவியர்களுக்கும் மற்றும் சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், சுவாமிகளுக்கும் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தினமும் விசேஷ பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து நேற்றுடன் 5 நாட்கள் நடந்த இந்த பூஜையுடன், திருப்பவுத்திர திருவிழா நிறைவு பெற்றது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் யாரும் அனுமதியின்றி இந்த விழா கோவில் உள் பிரகாரத்திலேயே நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News