ஆன்மிகம்
அருணந்தி சிவாச்சாரியார்

அருணந்தி சிவாச்சாரியார்

Published On 2021-07-02 08:03 GMT   |   Update On 2021-07-02 08:03 GMT
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய இரண்டு நூல்களில் சிறந்ததாக அறியப்படுவது, ‘சிவஞான சித்தியார்’. இந்த மகான், புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் முக்தி அடைந்தார்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை என்றாலும், இவரை அனைவரும் ‘சகலாகம பண்டிதர்’ என்று அழைத்துவந்தனர். இவர் சகல ஆகமங்களிலும் வல்லவராய் திகழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். திருத்துறையூரில் அவதரித்த இவர்தான், அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந் தவர். அந்த அடிப்படையில் மெய்கண்டாருக்கு இவரே குல குரு.

ஆனால் பரஞ்சோதியாரிடம் பெற்ற ஞானத்தின் பயனாக, மெய்கண்டார் சிறந்த ஞானியாகி அனைவருக்கும் சிவஞான போதனைகளை எடுத்துரைத்து வந்தார். இதுபற்றி அறிந்த சகலாகம பண்டிதர், சின்னஞ்சிறுவனான மெய்கண்டாரின் மீது பொறாமை கொண்டார். மேலும் தன்னுடைய வழிகாட்டுதலில் பிறந்த பிள்ளை, தன்னை வந்து சந்திக்காததை நினைத்து கோபம் கொண்டார். இதனால் தன்னுடைய சீடர்களில் ஒவ்வொருவராக அனுப்பி, திருவெண்ணெய்நல்லூரில் நடப்பதை அறிந்துவரச் செய்தார். ஆனால் சென்றவர்கள் யாருமே திரும்பிவரவில்லை. காரணம், அவர்கள் அனைவருமே மெய்கண்டாரின் உபதேசத்தில் மயங்கி, அவரிடமே சீடராக சேர்ந்துவிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சகலாகம பண்டிதர், தானே நேரடியாக சென்று மெண்கண்டாரை சந்தித்தார். அவர் வந்த நேரத்தில் தன்னுடைய சீடர்களுக்கு ஆணவம் (அறியாமை) பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார், மெய்கண்டார். அதை நிதானத்துடன் கேட்ட சகலாகம பண்டிதர், “ஆணவத்துக்கு ஒரு வடிவை காட்ட இயலுமா?” என்று கேட்டார்.

அதற்கு மெய்கண்டார், “28 ஆகமங்களும் கற்றுதேர்ந்தும், ஆணவத்திற்கு வடிவம் இல்லை என்ற உண்மையை உணராத நீங்கள்தான் ஆணவத்தின் வடிவம்” என்று பதிலுரைத்தார். மேலும் அவரை தலை முதல் கால் வரை பார்த்தார். அந்த ஞானப் பார்வையில், சகலாகம பண்டிதரின் அறியாமை நீங்கியது.

‘இவரே என்னை ஆட்கொள்ள வந்த குரு’ என்று உணர்ந்த சகலாகம பண்டிதர், மெய்கண்டாரின் பாதம் பணிந்து தம்மை சீடராக ஏற்கும்படி வேண்டினார். மெய்கண்டாரும், சகலாகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, ‘அருள்நந்தி சிவம்’ என்னும் பெயரிட்டு தன்னுடைய தலைமைச் சீடராக ஏற்றுக்கொண்டார். இந்த ‘அருள்நந்தி சிவம்’ என்பதே ‘அருணந்தி சிவாச்சாரியார்’ என்றானது.

அருணந்தி சிவாச்சாரியார் அருளிய இரண்டு நூல்களில் சிறந்ததாக அறியப்படுவது, ‘சிவஞான சித்தியார்’. இந்த மகான், புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் முக்தி அடைந்தார். இவருக்கு திருத்துறையூரில் திருக்கோவில் இருக்கிறது.

சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் இவர் சிறப்புக்குரியவா். நாயன்மார்களுக்குப் பின், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை பரப்பியவர்களுள் முக்கியமானவர். இவர் சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர் மரபில் தோன்றியவர். மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர். சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. மேலும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை சுருக்கி, ‘திருத்தொண்டர் புராண சாரம்’ என்ற பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றை ‘சேக்கிழார் புராணம்’ என்ற பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோவிலின் வரலாற்றை ‘கோயிற் புராணம்’ என்னும் பெயரில் 100 பாடல்களாக பாடினார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை போன்ற பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவைதான்.

சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். அவர், தீட்சிதர் அல்லாதவரை குருவாக ஏற்றதால், அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. அவரை தங்கள் சமுதாயத்தில் இருந்தும் நீக்கிவைத்தனர். இதனால் உமாபதி சிவம், சிதம்பரத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தார். இந்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கொடியேற்றுவதற்கென உமாபதி சிவத்திற்குரிய முறை வந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள், வேறு ஒருவரிடம் கொடியேற்றும் பொறுப்பை அளித்தனர். ஆனால் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லை. பலர் முயற்சித்தும் பலனில்லை. சிவபெருமானின் திருவருளை உணர்ந்த தீட்சிதர்கள், உமாபதி சிவத்தை அழைத்து கொடியேற்றச் சொன்னார்கள். அவர் நான்கு பதிகங்களைக் பாடி கொடியை ஏற்றிவைத்தார். இந்த பாடல்களே ‘கொடிக்கவி’ என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.
Tags:    

Similar News