ஆன்மிகம்
நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2021-03-23 06:33 GMT   |   Update On 2021-03-23 06:33 GMT
நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 62 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட பூக்குண்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில்‌ பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 8-ந் தேதி ‌கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிசட்டி எடுத்தலும் நடந்தது.

விழாவில் நேற்று மதியம் ஆண், பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 62 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட பூக்குண்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் பூவாரி போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (செவ்வாய்கிழமை) கிடா வெட்டுதலும், நாளை (புதன்கிழமை) அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த வாரம் அக்னிச்சட்டி எடுத்தல், குழந்தையை கரும்பில் தொட்டில்‌‌ கட்டி கொண்டு செல்லுதல், அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளை பக்தர்கள் நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News