ஆன்மிகம்
நரசிம்மசாமி

நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-22 08:19 GMT   |   Update On 2021-03-22 08:19 GMT
நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந் தேதி மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 26-ந் தேதி வரை காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிம்மம், ஹனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து நாமக்கல் குளக்கரை மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வருகிற 27-ந் தேதி மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது. திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்ய உள்ளனர். தொடர்ந்து மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10 மணிக்கு, திருமஞ்சனம், தீர்த்தவாரி பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

வருகிற 29-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கோட்டை நரசிம்ம சாமி தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News