ஆன்மிகம்
மயிலம் மயிலியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

மயிலம் மயிலியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

Published On 2021-03-18 05:43 GMT   |   Update On 2021-03-18 05:43 GMT
மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள சப்தகன்னி மயிலியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் சப்தகன்னி மயிலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி மயிலம் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில் பாலசித்தர் அக்னி தீர்த்தம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து 108 பால் குடத்தை பக்தர்கள் ஊர்வலமாக மயிலியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் கோவில் முன்பு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சீர்வரிசை, மாவிளக்கு தீபம் எடுத்து வந்து திருமணம் நடத்தப்பட்டது. திருமண நிகழ்ச்சி முடிந்ததும், அம்மனுக்கு என நேர்ந்து விடப்பட்ட ஆட்டை பலிகொடுத்து, அதன் ரத்தம் சாதத்தில் விடப்பட்டது. பின்னர் அம்மன் வீதி உலா சென்று திரும்பியவுடன் ஊர் எல்லைக்கு சென்று அந்த சாதத்தை படையல் போட்டு ஆகாயத்தை நோக்கி வீசினர்.

அப்போது குழந்தையில்லாத பெண்கள் விரதமிருந்து மடிப்பிச்சை ஏந்தி அந்த சாதத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதன் காரணமாக ஆகாயத்தை நோக்கி வீசப்பட்ட சாத்தை பெண்கள் பலர் தங்களது மடியில் ஏந்தி சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News