ஆன்மிகம்
தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-25 06:13 GMT   |   Update On 2021-02-25 06:13 GMT
தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பை அடுத்த அகரத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் வழிபாடு மற்றும் விழா நிகழ்வுகள் அனைத்தும் பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவு கேட்டபிறகு நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.

அதன்படி கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து அம்மனின் உத்தரவு கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் பாலாலயம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பக்தர்களின் வசதிக்காக புதிய மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து அகர முத்தாலம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை மூன்றாம் கால யாக பூஜையை தொடர்ந்து தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணி அளவில் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்தில் ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் அகரம் முத்தாலம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் தாடிக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் எம்.எல்.ஏ.வுமான இ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குனர்கள் வேலுச்சாமி கவுண்டர் மற்றும் கந்தசாமி கவுண்டர், எவரடி ஸ்பின்னிங் மில்ஸ் இணை நிர்வாக இயக்குனர் சந்திரகுமார், ஸ்ரீ புவனேஸ்வரி மில்ஸ் நிர்வாக இயக்குனர் அர்விந்த், அகரம் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட கோவில்கள் அறங்காவலர் நியமன குழு உறுப்பினருமான அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு அ.தி.மு.க. பேரூர் துணைச் செயலாளர் முத்தையா, அகரம் பேரூர் அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.எம். ஏஜென்சிஸ் உரிமையாளர் சவரிமுத்து, தொழில் அதிபர்கள் அருணா சேம்பர் மணிகண்டன், மூர்த்தி, பாலம் ராஜக்காபட்டி கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணன், அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. செயலாளர்கள் ஜெயபால், நாகப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் தொழிலதிபர் மேகநாதன், செந்தில், பெரியசாமி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News