ஆன்மிகம்
மாரியம்மன்

தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது

Published On 2021-02-21 08:29 GMT   |   Update On 2021-02-21 08:29 GMT
நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி வருகிற 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், மூத்த பிள்ளையார் முதல் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேவணாம்பாளையம் அய்யப்பன் கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, புற்றுமண், தீர்த்தக்குடம் ஊர்வலமாக நடக்கிறது. தொடர்ந்து மதியம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வருகிற 24-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, மூலமந்திர ஹோமம், தீபாராதனை, மாலை 4.45 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாக வேள்வி, சோடசர உபசார பூஜைகள், மாரியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சக்தி நிலை நிறுவுதல் நடக்கின்றன.

25-ந்தேதி காலை 7.30 மணிக்கு மண்டல பூஜைகள், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 10.30 மணிக்குமேல் மூல ஆலய கோபுர கும்பாபிஷேகம், விநாயகர், மாரியம்மன் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் விமலா, செயல் அலுவலர் செல்வி வனிதா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News