ஆன்மிகம்
திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் தொடங்கியது

திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் தொடங்கியது

Published On 2021-02-18 08:14 GMT   |   Update On 2021-02-18 08:14 GMT
திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் உள்ள பிரசித்தி பெற்ற காசியிலும் வீசம் புண்ணியம் தரும் பித்ரு தோஷம் நீக்கும் தலமான காமாட்சி- மீனாட்சி சமேத கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் மற்றும் ஆற்றுக்கு தெற்கே அமைந்துள்ள கங்கவராக நதீஸ்வரர் கோவிலின் நதிக்கரையில் தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு விநாயகர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொடிமரத்தை அலங்கரித்து ஆலய தலைமை குருக்கள் சரவணா சிவாச்சாரியார்கள் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். மாலையில் சாமி வீதி உலா நடந்தது.

தொடர்ந்து பிரம்மோற்சவம் நடைபெறும் 11 நாட்களிலும் காலை, மாலையில் சாமி வீதி உலா வருகிறார். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25-ந் தேதியும் அதனைத் தொடர்ந்து மறுநாள் 26-ந் தேதி காலை மாசிமக தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தர்ப்பணம், சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதற்காக கோவில் தனி அதிகாரி சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களுக்கான வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேற்கு போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் அங்கு போலீசார் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவசர உதவி, மருத்துவ உதவி தீயணைப்புத் துறை உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News