ஆன்மிகம்
கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-01-27 04:39 GMT   |   Update On 2021-01-27 04:39 GMT
பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 5 நிலை ராஜகோபுரம் கொண்ட இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் முடிந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 22-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் 4-ம் கால பூஜையும், காலை 8 மணிக்கு பரிவார பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணியளவில் ராஜ கோபுரம், அங்காள பரமேஸ்வரி கோவில் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அறங்காவலர் குழு சார்பில் சமபந்தி விருந்து நடந்தது. மேலும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆன்மிக நற்பணி மன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு 7 மணியளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News