ஆன்மிகம்
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று அனுமதி

Published On 2020-12-01 07:48 GMT   |   Update On 2020-12-01 07:48 GMT
நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமல அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று மதியம் 1.46 மணிமுதல் இன்று மதியம் 2.23 மணி வரை பவுர்ணமி காலம் என்பதால் இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது மிகுந்த பலனை அளிக்கும் என்று நேற்று பக்தர்கள் கிரிவலம் செல்ல முயன்றனர்.

ஆனால் கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் போலீசார் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இருந்தபோதிலும் கிரிவலம் செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பக்தர்கள் குறுக்கு சாலைகள் வழியாக கிரிவலப் பாதையில் புகுந்து கிரிவலம் சென்றனர்.

நேற்று காலை முதல் இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களை ஆங்காங்கே போலீசார் இடை மறித்து கிரிவலம் செல்ல விடாமல் பாதியிலேயே அனுப்பி வைத்தனர்.

நேற்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நேற்று சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் இன்று காலை தரிசனத்திற்கு வந்தனர்.

ஏற்கனவே 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் இன்று பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
Tags:    

Similar News