ஆன்மிகம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2020-11-30 08:12 GMT   |   Update On 2020-11-30 08:12 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இன்றி பவுர்ணமி மற்றும் கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.
பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி உண்டு. கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முதலில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் மலை பகுதியில் மழை பெய்து வருவதால் அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. பவுர்ணமி மற்றும் கார்த்திகையான நேற்று அனுமதி வழங்கப்படவில்லை.

இதை அறியாமல் ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

கோவிலுக்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டதால் மாவூற்று விலக்கு, தாணிப்பாறை விலக்கு ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று சுந்தர மகாலிங்கம், சந்தான மகாலிங்கம் ஆகிய சுவாமிகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சதுரகிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்பட்டது. அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இன்றி பவுர்ணமி மற்றும் கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். நேற்று மாலையும் மலை பகுதியில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News