ஆன்மிகம்
தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளிய காட்சி.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்: பக்தர்களுக்கு தடை

Published On 2020-11-28 09:17 GMT   |   Update On 2020-11-28 09:17 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கடந்த 21-ந்தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-வது நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் உற்சவர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மாள் மற்றும் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம் நடைபெற்றது.

இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து ஒரே சமயத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தனித்தனியாக புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளியபடி வலம் வந்தனர். ஒரே சமயத்தில் மூன்று சுவாமிகளும் எழுந்தருளியது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. இதனையடுத்து சுவாமிகளுக்கு மகா தீப, தூப ஆராதனை நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் 7 மணியளவில் கோவிலுக்குள் முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கீரிடமும், திருக்கரத்தில் நவரத்தினங்களான செங்கோல் சூட்டி பட்டாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. இதே சமயம் கோவிலின் திருக்குளம் சந்து வழியாக கருவறைக்கு சென்று முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மூன்றை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகேற்றப்பட்டு தயாராக உள்ளது. மேலும் 350 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவற்றை கோவில் நிர்வாகம் தயார் செய்துள்ளது. கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையொட்டி இன்றும், நாளையும் பக்தர்கள் மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் இன்றுபோலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

Tags:    

Similar News