ஆன்மிகம்
கார்த்திகை தீபம்

நாளை மறுநாள் திருக்கார்த்திகை விழா

Published On 2020-11-27 09:05 GMT   |   Update On 2020-11-27 09:05 GMT
இந்துக்களின் முக்கிய விழாவான திருக்கார்த்திகை விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தீபம் ஏற்ற அகல்விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் மாதங்களில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வருகின்ற நாள் திருக்கார்த்திகை விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மாலை இந்துக்கள் தங்களின் வீடுகளில் தலைவாசல் மற்றும் முற்றங்களிலும், அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் என்னும் அகல் விளக்கு ஏற்றுவார்கள். 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அகல் விளக்குகள் ஏற்றப்படுவதும் உண்டு.

சில கோவில்களில் பட்டுப்போன பனை மரத்தை நட்டு, அதை சுற்றி காய்ந்த பனை ஓலைகளை கட்டி சொக்கப்பனை செய்து எரிப்பார்கள். கார்த்திகை தீப ஒளியிலும், சொக்கப்பனை எரியும் ஒளியிலும் சிவன் ஜோதியாக காட்சி தருகிறார் என்பது ஐதீகம்.

திருக்கார்த்திகை நாளையொட்டி குமரி மாவட்டத்தில் அகல்விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலையோரங்களிலும், சந்தைகளிலும் குவியல் குவியலாக அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கி செல்கிறார்கள்.

பொற்றையடி அருகே மருந்துவாழ் மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை மறுநாள் மாலை தீபம் ஏற்றப்படுகிறது.

திருக்கார்த்திகை நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பனை ஓலை அல்லது திரளி இலையில் கொழுக்கட்டை என்னும் பலகாரம் செய்து, உறவினர்களுக்கு கொடுத்தும், தாங்களும் உண்டு மகிழ்வார்கள்.
Tags:    

Similar News