ஆன்மிகம்
தாணுமாலயசாமி கோவில்

தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழாவை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2020-11-27 08:43 GMT   |   Update On 2020-11-27 08:43 GMT
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா டிசம்பர் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 29-ந் தேதி தேரோட்டமும், 30-ந்தேதி திருவாதிரையும் நடத்த கோவில் நிர்வாகம் பஞ்சாங்க முறைப்படி தேதி குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளதால் மார்கழி திருவிழாவை நடத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து சுசீந்திரம் ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுக்கும், வாகன பவனியும், மார்கழி திருவிழாவும் நடத்த அரசு அனுமதி பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது அ.தி.மு.க. மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் நாகசாயி, கிளை செயலாளர் மணி, முன்னாள் கவுன்சிலர் வீரபத்திரன் மற்றும் இந்து இயக்கத்தினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News