ஆன்மிகம்
செங்கழுநீரம்மன்

செங்கழுநீரம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் 27-ம்தேதி நடக்கிறது

Published On 2020-11-25 07:22 GMT   |   Update On 2020-11-25 07:22 GMT
வீராம்பட்டினத்தில் செங்கழுநீரம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் நடைபெறும் தேரோட்டம் மிகவும் சிறப்பு பெற்றது. 2019-ம் ஆண்டு வரை தேரோட்டத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான தேர் பயன்படுத்தப்பட்டது.

இது பழுதானதால் புதிய தேர் அமைக்கவேண்டும் என்று பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு மற்றும் பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கியது. தற்போது இதற்கான பணிகள் முடிந்து தேர் தயார் நிலைக்கு வந்துள்ளது.

இதையடுத்து புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார். ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலர் மகேஷ், அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தேர் திருப்பணிக்குழு தலைவர் சந்திரன், பொருளாளர் கோபால், உறுப்பினர்கள் தனுஷ்கோடி, பிரபாகரன், மலையாளத்தான், சண்முகசுந்தரம், சண்முகம், பிரபு, கந்தன், மதிவாணன், அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இரிசப்பன், உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் தேர் வெள்ளோட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்திற்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து தரிசிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சிறப்பு பஸ்களும் விடப்படுகின்றன.
Tags:    

Similar News