ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

கடலூரில் அஸ்வத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2020-11-05 06:30 GMT   |   Update On 2020-11-05 06:30 GMT
கடலூரில் அஸ்வத்த விநாயகர் கோவில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மரியசூசை நகரில் அஸ்வத்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் நவக்கிரக யாகம், லட்சுமி யாகம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து மாலையில் வாஸ்து சாந்தி, மிருத் பூஜை, ரக்சாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு ரக்சா பந்தனம், நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், மகா பூர்ணாகுதி பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கோவில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News