ஆன்மிகம்
நவராத்திரி

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படும் நவராத்திரித் திருவிழா

Published On 2020-10-21 06:59 GMT   |   Update On 2020-10-21 06:59 GMT
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் இந்துக்களால் இப்பண்டிகையானது பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரி என்னும் சமஸ்கிருதச் சொல்லானது ஒன்பது இரவுகளைக் குறிக்கின்றது. இந்த ஒன்பது நாட்களும் அன்னை துர்க்கையின் ஒன்பது அவதாரங்களையும் பூஜித்து வணங்குகின்றோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் இந்துக்களால் இப்பண்டிகையானது பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது.

வடக்கு முதல் தெற்குவரை...

குஜராத் மாநிலத்தில் மிகவும் விமரிசையாக இந்த நவராத்திரித் திருவிழாவானது கொண்டாடப்படுகின்றது. இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் விரதமிருந்து, துவாரங்களுடன் இருக்கும் மண் பானைகளை வீட்டிற்கு கொண்டு வருவதுடன் விளக்கேற்றி அன்னை துர்காவிற்கு பூஜை செய்து ஆராதனையும் காண்பிக்கப் படுகின்றது. அந்தப் பானையானது கர்பி என்றும் அதில் தெரியும் வெளிச்சமானது சக்தி என்றும் அழைக்கப்படுகின்றது.

குஜராத்திப் பெண்களும், ஆண்களும் இந்த நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் அவர்களுடைய பாரம்பரிய உடைகளான சனியா சோளி மற்றும் குர்தாவை அணிந்து கொண்டு கர்பா ராஸ் மற்றும் தாண்டியா ராஸ் என்ற இரண்டு விதமான அழகிய நடனங்களை ஆடுகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. இவர்கள் நகரின் பொதுவான இடங்களில் மேடைகளை அமைத்து அதன்மீது பெரிய துர்கா சிலைகளை வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து பூஜை, ஆரத்தி என்று மிகவும் அமர்க்களமாக இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு சிலைகள் வைத்து வணங்கும் இடத்தை பண்டல் என்று அழைக்கிறார்கள்.

ஆண்களும், பெண்களும் தங்களுடைய பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு சங்குகள் முழுங்க, மணியோசையுடன் துர்காவிற்கு காட்டப்படும் ஒளிமிகுந்த ஆராதனையில் கலந்து கொண்டு வாழ்வின் இருளை விரட்டி ஒளியை ஏற்றுமாறு அன்னையை வேண்டிக் கொள்கிறார்கள். துர்கா பூஜை சமயங்களில் பெண்கள் பெரும்பாலும் வெண்மை நிறப்பட்டில் சிவப்பு நிறப்பார்டருடன் கூடிய சேலைகளையே அணிகிறார்கள்.

தென்னிந்தியா:- கொலுவின் அழகு

தென்னிந்தியாவில் நவராத்திரித் திருவிழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் கொலு அமைக்கப்பட்டு, அதைப் பார்வையிட உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினரை அழைக்கிறார்கள். கொலுவில் பலவிதமான பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்கிறார்கள்.

கன்னடர்களால் பொம்பே ஹப்பா என்றும், பொம்மகுலு என்று மலையாளிகளாலும், பொம்மை கொலு என்று தமிழர்களாலும், பொம்மல கொலுவு என்று தெலுங்கு மக்களாலும் கொலுவானது சிறப்பாக அழைக்கப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

முப்பெருந்தேவிகளான லட்சுமி, துர்கை மற்றும் சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. கொலுவைப் பார்வையிட வரும் பெண்களுக்கு தேங்காய், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், இனிப்புகள் மற்றும் ரவிக்கைத் துணிகளும், சிறு பெண் பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

கொலுவின் முக்கியத்துவம்: இன்றைய தலைமுறையினருக்கு புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் தசாவதாரக் காட்சிகளை பொம்மைகளின் மூலம் எளிதாக விளக்க கொலு பெரிதும் உதவுகின்றது. நாம் அனைவரும் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கும் பரிணாம ஏணியாக கொலு படிகள் விளக்கப் படுகின்றன.

கொலு படிகள் எப்பொழுதும் ஒற்றை இலக்கத்திலேயே அமைக்கப்படுகின்றது. வீட்டிலிருக்கும் பொம்மைகளைப் பொறுத்து ஒன்று முதல் பதினொரு படிகள் வரை அமைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதன்மீது பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

முதல்படியில் கலசம் வைக்கப்பட்டு அதன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, துர்கை மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை வைப்பதை பாரம்பரியமாகக் கடைபிடிக்கிறார்கள். அதன்பிறகு வரும் படிகளில் முனிவர்கள் மற்றும் தேசத் தலைவர்களும், அடுத்து கல்யாணக் காட்சிகளும், பின்னர் செட்டியார் பொம்மைகளும் இடம் பிடிக்கின்றன.

கொலு வைப்பர்கள் ஒவ்வொரு வருடக் கொலுவின் போதும் புது பொம்மை ஒன்றை கொலுவில் வைப்பதை கட்டாயம் கடைபிடிக்கிறார்கள்.

இந்த நவராத்திரித் திருவிழாவானது அனைவரது வீடுகளிலும், தீமையை அழித்து நன்மையைத் தரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
Tags:    

Similar News