ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மன் வெள்ளிக்காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்த காட்சி.

கன்னியாகுமரி கோவிலில் வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

Published On 2020-10-21 06:22 GMT   |   Update On 2020-10-21 06:22 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்றவைகளும், மாலையில் சாயராட்சை தீபாராதனையும், இரவு வாகன பவனியும் நடைபெற்று வருகிறது.

4-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இந்த அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன்போற்றி, ராதாகிருஷ்ணன்போற்றி, விட்டல்போற்றி, பத்மநாபன்போற்றி மற்றும் கீழ்சாந்திகள் சீனிவாசன்போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி, ஸ்ரீதர்போற்றி ஆகியோர் நடத்தினர்.

பின்னர் காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, பில்லாக்கு மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது.

இரவு 8 மணிக்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். வாகன பவனி முடிந்த பின்னர் கோவிலில் உள்ள சிறிய பஞ்சலோக அம்பாள் சிலையை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனியாக கொண்டு வந்தனர்.

நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுஉறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் ரமேஷ், வருமானவரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் , குமரி மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக காசாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவு நாளான 26-ந் தேதி மாலை 6 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News