ஆன்மிகம்
பெரிய கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

ராஜராஜசோழன் சதய விழாவை எளிமையாக கொண்டாட திட்டம்: வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது

Published On 2020-10-21 04:55 GMT   |   Update On 2020-10-21 04:55 GMT
தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழன் சதய விழாவை கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு எளிமையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் :

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. மேலும் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகிறார்கள்.

தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அரசு சார்பில் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதயவிழாவையொட்டி 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி 2 நாட்களும் தஞ்சை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். அதன்படி இந்த ஆண்டு 1035-வது சதய விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு சதய விழாவை எளிமையான முறையில் கொண்டாட திட்டமிட்டு உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு சதய விழா அரசு வழிகாட்டுதல்படி கொண்டாடப்படுகிறது. மேலும் 1 நாள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை, சதய விழாக்குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, வழக்கமாக நடைபெறும் பந்தல்கால் முகூர்த்தம் இல்லாமல், பெரிய கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு பால், சந்தனம், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் வராகி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News