ஆன்மிகம்
முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களையும், காப்பு வாங்கியவர்களையும் காணலாம்.

குலசேகரன்பட்டினம் தசரா: முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2020-10-19 08:41 GMT   |   Update On 2020-10-19 08:41 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். தசரா குழு நிர்வாகிகள் காப்பு வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கொடியேற்று விழாவில் பக்தர்களை அனுமதிக்கவில்லை.

2-ம் நாளான நேற்று முதல் 9-ம் நாளான வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 6 ஆயிரம் பக்தர்களும், நேரடியாக வரும் 2 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தசரா திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் அம்மன் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கை கழுவும் திரவத்தால் கைகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் கோவிலில் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து, ரூ.100 கட்டணம் செலுத்திய பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடியாக வரும் பக்தர்கள் இலவச தரிசனத்திலும், ரூ.100 கட்டண சிறப்பு தரிசனத்திலும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழா கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருந்து வரும் பக்தர்கள் காப்பு அணிந்து வேடம் அணிவது வழக்கம். கொடியேற்று விழாவில் பக்தர்களை அனுமதிக்காததால், நேற்று முதல் தசரா குழு நிர்வாகிகளுக்கு கோவில் அலுவலகத்தில் காப்பு வழங்கப்பட்டது. இதற்காக முன்பதிவு செய்த தசரா குழு நிர்வாகிகள், கோவில் அலுவலகத்துக்கு சென்று காப்புகளை மொத்தமாக வாங்கி சென்றனர். அவற்றை அந்தந்த ஊர்களில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு கொண்டு சென்று வழங்கினர்.

கோவில் பிரகாரத்திலும் பக்தர்களுக்கு காப்பு வழங்கப்பட்டது. காப்பு அணிந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களிலேயே வேடம் அணிந்து காணிக்கை வசூலித்து, விழா நிறைவு நாளில் அல்லது அதற்கு பின்னர் கோவிலில் வந்து செலுத்துவார்கள். குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News