ஆன்மிகம்
திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள்

திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள்

Published On 2020-10-01 08:40 GMT   |   Update On 2020-10-01 08:40 GMT
திருவாரூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் நீலமேகப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
கண்வ முனிவர் என்பவர், நாரதரிடம், “நாராயணனின் நாமத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால், அவனது தரிசனம் கிடைக்கும்?” என்று கேட்டார். அதன்படி நாரதர் சுட்டிக்காட்டிய இடமே, தற்போதைய திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் நீலமேகப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

இங்கு வந்து தவம் இயற்றி தன்னை வழிபட்ட கண்வ முனிவருக்கு, அதிசுந்தரனாக பெருமாள் திருக்காட்சி கொடுத்தார். எனவே இத்தலம் ‘கண்வபுரம்’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘திருக்கண்ணபுரம்’ ஆனது. திருவரங்கத்திற்குச் சென்று வழிபட்ட விபீஷணன், “கிடந்த கோலத்தை கண்டேன்.. நடையழகை காண்பேனோ?” என்று கேட்டார். அதற்காக பெருமாள், நடையழகு காண்பித்தருளிய தலம் இதுவாகும். கோவில் அர்ச்சகர் ஒருவர், தன் காதலிக்கு சூட்டிய மாலையை பெருமாளுக்கு சாற்றி விட்டார்.

மேலும் அந்த மாலையை கோவிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு வழங்கினார். அதில் இருந்த நீளமான முடியைக் கண்ட மன்னன், கோபத்துடன் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரித்தான். அதற்கு அந்த அர்ச்சகர், “பெருமாளுக்குரிய முடி (சவுரி)தான் அது” என்று பொய் பேசினார். பின்னர் கோவிலுக்குச் சென்று இறைவனிடம் தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். மறுநாள் மன்னன் ஆலயத்திற்கு வந்தபோது, உண்மையிலேயே பெருமாளின் பின்புறம் நீளமான முடி இருந்தது. இதன் காரணமாகவே இத்தல இறைவன், ‘சவுரிராஜப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.
Tags:    

Similar News