ஆன்மிகம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி

Published On 2020-09-30 08:29 GMT   |   Update On 2020-09-30 08:29 GMT
நாளை (வியாழக்கிழமை) பவுர்ணமி வருகிறது. ஆதலால் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரையூர் அருகே சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இந்தநிலையில் நாளை (வியாழக்கிழமை) பவுர்ணமி வருகிறது. ஆதலால் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று பிரதோஷத்தையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தேனி, நெய்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர்.

வழக்கமாக காலை 7 மணிக்கு திறக்க வேண்டிய வனத்துறை கேட் காலை 6 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மழைக்காலம் என்பதால் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News