ஆன்மிகம்
ஏனாதிநாதர்

திருநீற்றுக்கு மதிப்பளித்த ஏனாதிநாதர்

Published On 2020-09-23 08:34 GMT   |   Update On 2020-09-23 08:34 GMT
சிவபெருமானை முதன்முதற் கடவுளாக வழிபடுபவர்களும், சிவனடியார்களும் கூட மதித்து வணங்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், ஏனாதிநாதர்.
சிவபெருமானை முதன்முதற் கடவுளாக வழிபடுபவர்களும், சிவனடியார்களும் கூட மதித்து வணங்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், ஏனாதிநாதர். இவர் சோழவள நாட்டில் ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் சிவனடியார்களை உபசரிப்பதிலும், திருநீற்று தொண்டு வழிபாட்டிலும் நிலைத்து நின்றவர்.

ஏனாதிநாதர், அரச வம்சத்தினருக்கு வாள் பயிற்சி கற்றுத் தரும் ஆசிரியர் தொழிலை செய்து வந்தார். அதன் மூலம் வரும் பொருளைக் கொண்டு, சிவனடியார்களை உபரிக்கும் பேரன்பு கொண்டவராய் விளங்கினார்.

ஏனாதிநாதர் வாள்பயிற்சி பயிற்றுவிக்கும் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த காலத்தில், போர் பயிற்சி பெற விரும்பிய அனைவரும், அவரிடமே வாள் பயிற்சி பெற நினைத்தனர். இதனால் ஏனாதிநாதரின் தாய்வழியில் உறவினரான அதிசூரன் என்பவருக்கு அந்தத் தொழிலில் வருவாய் குறைந்தது. இதனால் ஏனாதிநாதர் மீது பொறாமை கொண்ட அதிசூரன், பெரும் வீரர் கூட்டத்தோடு சென்று, ஏனாதிநாதரை போருக்கு வரும்படி அழைத்தான்.

ஏனாதிநாதர் போர்க்கோலம் பூண்டு புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் வீரர்கள், அவருக்கு அரணாக இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். அதிசூரன், “நாம் இருவரும் இரு அணியாக போர்புரிவோம். யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே வாள் பயிற்றும் உரிமையை மேற்கொள்ள வேண்டும். மற்றவர் அந்தத் தொழிலை விட்டுவிட வேண்டும்” என்றான்.

அதை ஏற்று ஏனாதிநாதர் தன் வீரர்களுடன், அதிசூரனையும் அவனது படையையும் எதிர்த்து போரிட்டார். போரில் ஏனாதிநாதருக்கே வெற்றி கிடைத்தது. தோல்வியால் அங்கிருந்து சென்ற அதிசூரன், சில நாட்களிலேயே நயவஞ்சகமாக சூழ்ச்சி செய்தான். ஏனாதிநாதரை போரிட்டு வெற்றி காண்பது என்பது அரிதான விஷயம். எனவே அவரை சிவனடியாரின் வேடத்தில்தான் வீழ்த்த வேண்டும் என்று அதிசூரன் நினைத்தான். ஏனெனில் சிவனடியார்களையோ, திருநீறு போன்ற ஈசனின் திலகங்களை தாங்கியிருப்பவர்களையோ ஏனாதிநாதர் எதிர்த்து நிற்கமாட்டார் என்பதை அதிசூரன் அறிவான். அதனால் அதனையே தன் ஆயுதமாக கையில் எடுத்தான்.

ஏனாதிநாதரை ஊரின் வெளியே தனியாக வரும்படியும், நாம் இருவரும் மட்டும் போர் புரியலாம் என்றும் தன் வீரன் ஒருவன் மூலம் சொல்லி அனுப்பினான் அதிசூரன். அதை நம்பிய ஏனாதிநாதர் போர்க்கோலம் பூண்டு தனியாகச் சென்றார். அங்கு முன்னதாகவே சிவனடியார் போல் நெற்றியில் திருநீற்றை திலகமாக இட்டபடி காத்திருந்தான், அதிசூரன். ஏனாதிநாதர் வந்ததும், அவர் அறியாத வண்ணம் தன்னுடைய நெற்றியை கேடயம் கொண்டு மறைத்தபடி அவரை நெருங்கிச் சென்றான், அதிசூரன். ஏனாதிநாதரும், அவனை எதிர்த்து போரிடுவதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வாளையும், கேடயத்தையும் இறுகப்பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

ஏனாதிநாதரின் அருகில் வந்த மறுநொடியே தன் நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை விலக்கினான், அதிசூரன். ஒரு நிமிடம் உறைந்து போனார், ஏனாதிநாதர். ‘திருநீற்றை தாங்கி நிற்கும் இந்த அடியவரை நான் எதுவும் செய்தால், சிவனையே தாக்கியதுபோல் ஆகிவிடும். அதே நேரம் நான் ஆயுதத்தை கீழே போட்டால், ஆயுதம் இல்லாதவரை சிவனின் திருநீறு தரித்தவர் தாக்கிவிட்டார் என்ற அவப்பெயர் அதிசூரனுக்கு வந்து சேர்ந்துவிடும்’ என்று கருதிய ஏனாதிநாதர், ஆயுதத்தை கையில் பிடித்தபடி அதிசூரனை எதுவும் செய்யாமல் அப்படியே நின்றார். அருகில் வந்த அதிசூரன், தன் கையில் இருந்த வாளால் ஏனாதிநாதரை குத்தி தன் வெறியைத் தீர்த்துக் கொண்டான்.

அப்போது ரிஷப வாகனத்தில் தோன்றிய சிவபெருமான், தன்னுடைய பக்தனை தன் அருளால் ஈர்த்து, தன்னுடனேயே இருக்கும் சிவபதவியை அளித்து மறைந்தார்.
Tags:    

Similar News