ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதை படத்தில் காணலாம்.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் தொடங்கியது

Published On 2020-09-19 06:23 GMT   |   Update On 2020-09-19 06:23 GMT
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் பிரசித்தி பெற்ற தேசிகர் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேசிகர் பிரம்மோற்சவம் 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தேசிகர் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெருமாள், தேசிகருக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.

முன்னதாக பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதன்பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல்லக்கு வீதி உலா நடைபெறவில்லை.

விழாவில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்ப சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி வருகிற 27-ந்தேதி ரத்தனங்கி சேவை, 29-ந்தேதி விடையாற்றி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று கோவிலுக்குள் பக்தர்கள் வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளதால், இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News