ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கம் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு கட்டாயம்

Published On 2020-09-18 08:29 GMT   |   Update On 2020-09-18 08:29 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில். தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவரும் ரெங்கநாதர் அருளை பெற்றுச்செல்ல ஆண்டுதோறும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் தரிசனத்திற்கு சில கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது. அதுவும் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். கூட்டம் அதிகம் கூடுவதை குறைக்கும் வகையில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளான 19-ந் தேதி, 26-ந் தேதி, அக்டோபர் மாதம் 3-ந் தேதி மற்றும் 10-ந் தேதிகளில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்கு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றி தரிசனம் செய்ய ஏதுவாக, www.sri-r-a-n-g-am.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம்.

மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்காக 6 நேர பிரிவுகளில் ஒவ்வொரு நேரத்திற்கும் சுமார் 600 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதன்படி, அன்று மொத்தம் 3,600 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய இயலும்.

காலை 6.30 மணி-8 மணி, காலை 8 மணி-10 மணி, காலை 10 மணி- பகல் 12 மணி, பகல் 12 மணி-பிற்பகல் 2 மணி, பிற்பகல் 2 மணி- மாலை 4.30 மணி, மாலை 4.30 மணி- 6 மணி ஆகிய ஒவ்வொரு நேரப்பிரிவிலும் 200 டிக்கெட்டுகள் ரூ.250 கட்டண தரிசனத்திற்கும், 200 டிக்கெட்டுகள் ரூ.50 கட்டண தரிசனத்திற்கும், 200 டிக்கெட்டுகள் கட்டணமில்லா இலவச தரிசனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களின் தரிசன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். இணையவழி டிக்கெட் வாங்கியவர்களது அடையாள அட்டை சரிபார்த்த பின்னரே தரிசனத்திற்கு ரங்கா ரங்கா கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.எந்த நேரத்திற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதோ, அந்த நேரப்பிரிவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கார்களில் வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு தரிசனத்திற்கு செல்ல வேண்டும். மேலும் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். உத்திரை வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது என்று திருச்சி மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News