ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Published On 2020-09-18 06:06 GMT   |   Update On 2020-09-18 06:06 GMT
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேயர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மகாளய அமாவாசையை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமியை தரிசனம் செய்தனர். இதேபோல் மகாளய அமாவாசையை யொட்டி நேற்று பலப்பட்டரை மாரியம்மன் கோவில், நரசிம்மசாமி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மோகனூர் பகுதியில் உள்ள கோவில்களில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டி ருத்ர ஹோமம் நடைபெற்றது.

இதேபோல் மோகனூர் நாவலடி கருப்பண்ணசாமி கோவில், காந்தமலை பாலதண்டாயுத சாமி கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News