ஆன்மிகம்
கூட்டம் இன்றி திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

புனித நீராடவும் தடை: திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடியது

Published On 2020-09-18 05:21 GMT   |   Update On 2020-09-18 05:21 GMT
மகாளய அமாவாசையில் திருச்செந்தூர் கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டதால், கடற்கரை வெறிச்சோடியது.
தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபடுவது வழக்கம். அதேபோன்று புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்திலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அரசின் வழிகாட்டுதல்படி, சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனினும் அங்குள்ள கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மகாளய அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கவும், கடலில் புனித நீராடவும் அனுமதிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், நேற்றும் கோவில் கடலில் புனித நீராடவும், கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கவும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து தடை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் ஏராளமான போலீசார் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து, அங்கு பக்தர்கள் செல்லாதவாறு கண்காணித்தனர். இதனால் கோவில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே, திருச்செந்தூர் பைரவர் கோவில் கடற்கரையில் பெரும்பாலான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, கடலில் புனித நீராடினர். பின்னர் அவர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
Tags:    

Similar News