கொரோனா தொற்று காரணமாக நெல்லையில் இன்று முதல் 18-ந்தேதி வரை பாபநாசம் செல்ல அனுமதி இல்லை. இந்த 3 நாட்களில் பாபநாசத்தில் உள்ள நதிக்கரையிலும் யாரும் குளிக்கவும் அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய அமாவாசை நாளை வருகிறது. இந்நாளில் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு நதிக்கரையில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப் பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் தர்ப்பணம் செய்ய ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள். இது தவிர தாமிரபரணி ஆற்று படித்துறையில் வைத்து ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
நெல்லை மாநகர பகுதி களில் குறுக்குத்துறை முருகன் கோவில், பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, திருப்புடை மருதூர் படித் துறை, முக்கூடல் ஆறு உள்ளிட்ட இடங்களில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
இந்த ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் நிற்க கூடாது என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளது.
அதன்படி நெல்லையில் இன்று முதல் 18-ந்தேதி வரை பாபநாசம் செல்ல அனுமதி இல்லை. இந்த 3 நாட்களில் பாபநாசத்தில் உள்ள நதிக்கரையிலும் யாரும் குளிக்கவும் அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தாமிரபரணி நதிக்கரைகளில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பொது மக்கள் யாரும் புனித நீராடுவதற்கும், பரிகார பூஜைகள் செய்வதற்கும், பிற சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்கும் தடை விதித்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.