ஆன்மிகம்
திண்டுக்கல் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2020-08-15 06:28 GMT   |   Update On 2020-08-15 06:28 GMT
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பொங்கலிட்டும், கூழ் ஊற்றியும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பக்தர்கள் வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வாசல் வெளிப்புறம் நின்று வழிபட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனையும், சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வழக்கமாக ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பழனி மாரியம்மன் கோவில், ரணகாளியம்மன் கோவில், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், நத்தம் மாரியம்மன் கோவில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
Tags:    

Similar News