ஆன்மிகம்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்ட காட்சி.

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை: வெளியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

Published On 2020-08-08 03:53 GMT   |   Update On 2020-08-08 03:53 GMT
ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் வழக்கமான பூஜை நடைபெற்றது. பக்தர்கள் வெளியில் நின்றவாறு விளக்கேற்றி வழிபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது முக்கிய கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டுக்கு இன்னமும் திறக்கப்பட வில்லை. இதனால், ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்கள் களை இழந்து காணப்படுகிறது. நேற்று ஆடி 4-வது வெள்ளிக்கிழமையொட்டி, உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதே வேளையில் நடை திறக்கப்படாமல் கோவில் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு கிடந்தது.

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதவின் சாவி துவாரம் வழியாக அம்மனை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள், வாசலில் கற்பூரம் ஏற்றியும், விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இதுபோல தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவிலிலும் வாசலுக்கு வெளியே நின்றபடி பக்தர்கள் அம்மனை தீபம் ஏந்தி வழிபட்டனர்.

திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிறிய அம்மன் கோவில்களில் சிறப்பு பூை-ஜையும், தீபாராதனையும் நடந்தது. அங்கு பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். திருச்சி சிம்கோ காலனியில் உள்ள ஆயிமகமாயி சமயபுரத்தாள் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் புவனேசுவரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதற்கிடையே சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ள சமயபுரம் பகுதி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவும் அபாய பகுதியாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் நேற்று அம்மனை வணங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் பல்வேறு பகுதியில் இருந்தும் சமயபுரம் வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.

இதனால் அவர்கள் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் முன்புறமும் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆர்ச் அருகிலும் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டுச் சென்றனர். இதேபோல், சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
Tags:    

Similar News