ஆன்மிகம்
சாய்பாபாவும்.. அற்புதப் பொருட்களும்...

சாய்பாபாவும்.. அற்புதப் பொருட்களும்...

Published On 2020-08-07 08:17 GMT   |   Update On 2020-08-07 08:17 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் தான் தன் கடைசி காலம் வரை சாய்பாபா வாழ்ந்த இடம். அவர் ஷீரடியில் பயன்படுத்தி வந்த பல பொருட்கள், அங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்..
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்தான், ஷீரடி. இதுதான் தன் கடைசி காலம் வரை சாயிபாபா வாழ்ந்த இடம். தான் வாழ்ந்த காலத்தில் ஷீரடி மட்டுமின்றி பல ஊர்களிலும் அவதிப்பட்டு வந்த மக்களின் துயரங்களை தீர்த்து வைத்தார். அவர் ஷீரடியில் பயன்படுத்தி வந்த பல பொருட்கள், அங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்..

சமாதி மந்திர்

ஷீரடி செல்லும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கியமான இடம் இது. இங்குதான் பாபாவின் சமாதி உள்ளது. இங்கு சலவைக் கற்களால் ஆன இரண்டு திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. சமாதிக்குப் பின்பகுதியில் சலவைக் கல்லால் ஆன பாபாவின் திருவுருவச் சிலை உள்ளது. இந்த சிலை, பாபா உயிருடன் இருப்பதுபோலவே தோற்றம் அளிக்கிறது. சமாதி மந்திரில் எந்த இடத்தில் நின்றாலும், பாபாவின் அன்பு பொங்கும் பார்வை நம்மையே பார்ப்பதுபோல இருப்பது அற்புதமானது.

ஷிவடி

துவாரகாமாயிக்கு அருகில் பாபா உருவாக்கிய தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஒரு கிணறும் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இருந்துதான், தான் வளர்த்த செடிகளுக்கு நீர் கொண்டு வந்து ஊற்றி மலர்ச் செடிகளை பராமரித்து வந்தார், பாபா. அதுவரை தரிசாக இருந்த இடம், அழகியதொரு நந்தவனமாக மாறியது. பாபா தன்னை சார்ந்திருக்கும் மக்களிடம் அடிக்கடி ஒரு உபதேசத்தை கூறுவார். ‘பல நூற்றாண்டுகள் வாழ்ந்து, மக்களுக்குப் பலன் அளிக்கும் மரங்களை நீங்கள் நட வேண்டும்’ என்பதே அந்த உபதேசம். பாபா உருவாக்கிய நந்தவனத்தில் இருக்கும் ‘ஷிவடி’ என்ற கிணற்றை பக்தர்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டும்.

குருஸ்தான்

ஷீரடியில் 16 வயதில் சாயிபாபா வந்து அமர்ந்த இடம், ஒரு வேப்பமரத்தின் அடியில்தான். அந்த இடம், ‘குருஸ்தான்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மரத்திற்கு அருகில், பூமிக்கு அடியில் இருந்த ஓர் அறையில்தான், சாயி பாபா தன்னுடைய குரு இருந்ததாக கூறினார். இந்த இடத்தில் தற்போது ஒரு கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு பாபாவின் படமும், சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாபா வழங்கிய சிவலிங்கம், இந்த இடத்தில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த புனித தலம், காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

துவாரகாமாயி

சாயிபாபா சுமார் 60 ஆண்டுகளாக தங்கியிருந்து வாழ்ந்த மசூதிக்கு, ‘துவாரகாமாயி’ என்று அவரே பெயர் சூட்டினார். சிதிலமான நிலையில் இருந்த அந்த மசூதியை செப்பனிட பக்தர்கள் அனுமதி கேட்டனர். ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த சாயிபாபா, பின்னர் அதற்கு அனுமதி அளித்ததோடு, மசூதியின் மேற்குப்புறச் சுவரில் மிம்பார் என்னும் மாடமும், அதன் அருகில் விளக்குகளைத் தாங்கும் படிக்கட்டுகளும் அமைக்க ஆலோசனையும் வழங்கினார். பாபா வாழ்ந்த காலத்தில், இந்த துவாரகாமாயி எப்போதும் திறந்தே இருக்கும். தற்போது காலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டும் திறந்துவைக்கப்படுகிறது. ஷீரடி செல்பவர்கள், நிச்சயமாக இந்த மசூதியை தரிசித்தே செல்வார்கள்.

பாபா உபயோகித்த அரவைக் கல்

துவாரகாமாயியில், மாவு அரைக்கும் அரவைக் கல் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது சாயிபாபா பயன்படுத்தியது. இந்த அரவைக் கல்லில் சாயிபாபா கோதுமையை அரைப்பது வழக்கம். ஒரு முறை பாபா, கோதுமையை அரைத்து அந்த மாவை ஷீரடி எல்லைக்கு வெளியே கொட்டிவிட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஷீரடியில் மக்கள் பலரும் காலரா நோயால் அவதிப்பட்டு வந்தனர். அந்த நோயைப் போக்குவதற்காகத்தான், பாபா கோதுமையை அரைத்து அதை ஊர் எல்லையில் கொட்டிவிட்டு வந்தார் என்பது பின்னர்தான் மக்களுக்கு தெரியவந்தது. நம் கர்மவினைகளை பாபா அரைத்து அழிக்கிறார் என்பதுதான் கோதுமை அரைப்பதன் உண்மையான பொருள். இந்த இயந்திரத்தை தரிசித்தால் பாபாவின் அருளால் நம் கர்மவினைகள் அகலும் என்பது உறுதி.

அடுப்பு

துவாரகாமாயியின் கூடத்தில், பாபா உபயோகித்த அடுப்பு உள்ளது. சாயிபாபா யாருடைய உதவியும் இல்லாமல், தானே சமைத்து ஏழைகளுக்கு அளிப்பார். பக்தர்கள் அனைவரும் பாபா உபயோகித்த அந்த அடுப்பை அவசியம் தரிசிக்க வேண்டும். பாபாவின் கருணையால், இந்த அடுப்பைத் தரிசிப்பவர்களின் வீட்டில் உணவுக்கு பஞ்சமே இருக்காது என்பது சாயிபாபா பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தண்ணீர் பானை

தான் உருவாக்கிய நந்தவனத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, துவாரகாமாயியில் வைக்கப்பட்டிருந்த மண் பானையில் ஊற்றி வைப்பார், சாயிபாபா. துவாரகாமாயிக்கு வரும் பக்தர்கள் அனைவரும், இந்த மண் பானை தண்ணீரை, பாபாவின் தீர்த்தம் என்று கூறி பருகுவார்கள். பாபா உபயோகித்த அந்தப் பானை இப்போதும் துபாரகாமாயியில் உள்ளது. இந்தப் பானையில் இருந்து பக்தர்கள் சிறிது தண்ணீர் எடுத்துக் குடித்து, தீராத நோய்களில் இருந்தும், உலக வாழ்க்கையின் துன்பங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். 
Tags:    

Similar News