ஆன்மிகம்
மன அமைதி அளிக்கும் மகான்களின் ஜீவ சமாதிகள்

மன அமைதி அளிக்கும் மகான்களின் ஜீவ சமாதிகள்

Published On 2020-08-05 09:45 GMT   |   Update On 2020-08-05 09:45 GMT
மகான்கள் ஜீவ சமாதி செய்யப்படுவது பற்றி பலரும் அறிந்திருப்போம். அவ்வாறு செய்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அது பற்றி சித்தர் திருமூலர் குறிப்பிட்டுள்ள நுட்பமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மகான்கள் ஜீவ சமாதி செய்யப்படுவது பற்றி பலரும் அறிந்திருப்போம். அவ்வாறு செய்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அது பற்றி சித்தர் திருமூலர் குறிப்பிட்டுள்ள நுட்பமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

‘சமாதி’ என்பதற்கு ‘ஆதி இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை மீண்டும் அவருடன் சமம் செய்தல்’ என்று பொருள். ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மகான்கள், சாதுக்கள் ஆகியோர் சித்தம் என்னும் உணர்வு அறிவு மூலம் கடுமையான ஒழுக்கம் மற்றும் உயர்ந்த தவமுறைகளை பின்பற்றி உடலையும், உள்ளத்தையும் காக்கின்றனர். சமாதி என்பது இறைவனால், ஒரு மகானுக்கு என்று நியமிக்கப்பட்ட காரியங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்த பின்னர் முக்தி அடைவதாகும். அதாவது, அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றும் இந்த பூமியில் இருக்கும்படி செய்து விட்டு ஆதி நிலையில் ஒன்றாக மாறுவதாகும். அந்த நிலையில், மகான்களின் உடல் மற்றும் மன இயக்கங்கள் நின்று விட்டாலும், உயிர்த்தன்மை அந்த உடலை விட்டுப் பிரிவதில்லை என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இறைவனோடு ஒன்றாக கலந்துவிட்ட மகான்களை அவர்களது சீடர்கள் உதவியோடு, ஜீவ சமாதிக்கான குறிப்பிட்ட சடங்குளைப் பின்பற்றி உடலை சமாதி செய்ய வேண்டும். அதற்கு ‘சமாதி கிரியை’ என்று பெயர். எந்த இடங்களில் ஜீவ சமாதி அமைப்பது, எவ்வாறு குழி தோண்டி அந்த குகையை அமைப்பது, அதற்குள் உடலை எப்படி வைப்பது ஆகிய சடங்குகளை தனது திருமந்திரம் நூலில் உள்ள 7-ம் தந்திரத்தில் ‘சமாதி கிரியை’ எனும் தலைப்பில் சித்தர் திருமூலர் விளக்கி இருக்கிறார்.

மகானாக அல்லது ஞானியாக வாழ்ந்து சமாதி ஆனவரது உடலை, சாதாரண மக்களுக்கு செய்வது போல தீயால் எரித்தால் சம்பந்தப்பட்ட நாட்டு மக்கள் வெப்பு நோயால் பாதிக்கப்படுவார்கள். மேலும், மழை வளம் குறைந்தால் பஞ்சம் உருவாகும். ஒரு மகானது உடல், கவனிக்க ஆளில்லாமல் கிடந்து புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உண்ணும் நிலை ஏற்பட்டால், நாட்டில் பகை உணர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஆன்ம ஞானம் அடைந்தவர்கள் இறந்த பின்னர், அவர்கள் உடலை முறைப்படி பூமிக்கு அடியில் சமாதி நிலையில் வைப்பது அவசியம் என்பதை திருமந்திரம் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளது.

சமாதி வைப்பது என்பது ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல. குழி எப்படி வெட்டப்பட வேண்டும், அதற்கான இடம் தேர்வு, குழிக்குள் எந்த பொருட்களை போட வேண்டும், உடலுக்கு செய்ய வேண்டிய சடங்குகள், குழியை எப்படி மூட வேண்டும் என்ற விதிமுறைகளையும் திருமந்திரம் தெளிவாகச் சொல்கிறது. சமாதி அடைந்த மகான் வாழ்ந்த பகுதி, அங்கே உள்ள சாலை ஓரம், குளக்கரை, ஆற்றின் நடுவில் உள்ள நிலப்பரப்பு, பூஞ்சோலை, நகர்ப்புறத்தில் உள்ள சுத்தமான பூமி, காடு, மலையடிவாரம் ஆகிய இடங்களை ஜீவ சமாதி அமைப்பதற்கான இடமாக தேர்வு செய்யலாம். அங்கே, குகை என்று சொல்லப்படும் சமாதிக்கான குழியை தோண்ட வேண்டும். குழி, ஒன்பது சாண் (ஒரு சாண் என்பது சுமார் 9 அங்குல அளவுள்ள முக்கால் அடி ஆகும்) அளவுக்கு குறையாத ஆழம் கொண்டிருக்க வேண்டும். அந்தக் குழி முக்கோண வடிவத்தில் இருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு பக்கமும் மூன்று சாண் அளவுள்ளதாக இருக்க வேண்டும். எடுக்கப்படும் மண்ணை குழியைச் சுற்றிலும் ஐந்து சாண் தூரத்தில் கொட்டி வைப்பது அவசியம்.

அந்த குழிக்குள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய பஞ்ச உலோகங்களையும், மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைடூரியம் ஆகிய நவரத்தினங்களையும் பரப்பி வைக்க வேண்டும். அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பை புல் பரப்பி, விபூதி மற்றும் சுண்ணாம்பு பொடிகளை போட வேண்டும். மலர்கள், சந்தனம், கஸ்தூரி, புனுகு, பன்னீர் போன்ற வாசனாதி திரவியங்களை குழிக்குள் தெளிக்க வேண்டும். பின்னர், தீப ஒளியால் குழிக்குள் ஆரத்தி காட்ட வேண்டும். அந்த குகை போன்ற குழியில் மகானது உடலை பத்மாசன நிலையில் உட்கார வைக்க வேண்டும். பின்னர், அந்த மகானில் உடல் மீது திருநீறு பூச வேண்டும். மலர்கள், அருகம்புல், நறுமணப்பொடி ஆகியவற்றையும் உடல் மேல் அணிவிக்க வேண்டும்.

அதன் பின்னர், பத்மாசனத்தில் அமர்த்தப்பட்ட மகானின் காலடியில் இளநீருடன் கூடிய உணவு வகையை நிவேதனம் செய்வது முறை. அதைத் தொடர்ந்து முகம், காதுகள், கண்கள் ஆகியவற்றை மூடி, ஞானியின் உடல் மீது பரிவட்டம் சாற்ற வேண்டும். இறுதியாக, திருநீறு, நறுமணம் கலந்த சுண்ணாம்பு பொடி, தர்ப்பை புல், வில்வ இலைகள் மற்றும் மலர்கள் ஆகியவற்றால் குழியை முற்றிலும் நிரப்ப வேண்டும். அந்த சமாதி குழிக்கு மேற்புறத்தில் மூன்றடி நீளம் மற்றும் மூன்றடி அகலம் கொண்ட மேடை அமைத்து, அங்கே ஒரு சிவலிங்கம் அல்லது ஒரு அரச மரச் செடியை நட வேண்டும். சமாதி வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்து, அதற்கு பதினாறு வகை உபசார பூஜைகளை செய்ய வேண்டும் என்று சித்தர் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கவுமாரம் மற்றும் சவுரம் ஆகிய ஆறு பிரிவுகளில் வழிபாட்டு சம்பிரதாயங்கள் இருக்கும் நிலையில் மகான்களை சமாதி செய்விக்கும் முறைகளும் அதற்கேற்ப அமைந்திருக்கும். உடலுடன் வாழ்ந்த காலத்தில் இறைவனை உணர்ந்த மகான்கள், அவர்களது சம்பிரதாய முறைப்படி சமாதியில் வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மகான்களின் ஜீவசமாதிக்கு சென்றால் மனம் அமைதி பெறுவதாகவும், சற்றே கூர்ந்து கவனித்தால் அங்கே இருக்கும் நல்ல அதிர்வலைகளை உணரலாம் என்றும் பக்தர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Tags:    

Similar News