ஆன்மிகம்
ஐயப்பனுக்கு தேங்காயில் நெய் ஏன்?

ஐயப்பனுக்கு தேங்காயில் நெய் ஏன்?

Published On 2020-08-05 06:08 GMT   |   Update On 2020-08-05 06:08 GMT
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி எடுத்துச் செல்வார்கள். அதில் நெய் தேங்காய் என்பது பிரதானம். இதைச் செய்வதற்கு சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதைப் பார்ப்போம்.
பரசுராமரால் நிர்மாணம் செய்யப்பட்ட புண்ணிய பூமி, கேரளம். இங்குதான் ஆதிசங்கரர் அவதரித்தார். இத்தகைய சிறப்புமிக்க கேரளாவின் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக, பக்தர்கள் பலரும் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வார்கள். அப்படி அவர்கள் செல்லும்போது இருமுடி கட்டி எடுத்துச் செல்வார்கள். அதில் நெய் தேங்காய் என்பது பிரதானம். தேங்காயின் மூன்று கண்களில் ஒரு கண்ணில் துளைபோட்டு, அதன் வழியாக நெய்யை ஊற்றி அடைத்து, இருமுடிக்குள் வைத்து எடுத்துச் செல்வார்கள். இதைச் செய்வதற்கு சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதைப் பார்ப்போம்.

முக்கண் கொண்ட தேங்காய், சிவ சொரூபம் ஆகும். சிவபெருமானுக்கு நெற்றிக்கண்ணோடு சேர்த்து மூன்று கண்கள் உண்டு. அதைப் போல, தேங்காயிலும் மூன்று கண்கள் இருப்பதைக் காணலாம். மேற்பகுதியில் புடைத்து சற்றே உயர்ந்த கண்ணை உடைய தேங்காய்களை, ஐயப்ப பக்தர்கள் தேர்வு செய்வார்கள். அந்த தேங்காயை ஒரு நாள் முழுவதும் நீரில் ஊறவைத்து, அதன் மேற்பரப்பில் உள்ள தோளைச்சீவி வழவழப்பாக மாற்றுவார்கள். மேற்புறம் உள்ள கண்ணை கத்தியால் குடைந்து, உள்ளிருக்கும் தண்ணீரை வெளியேற்றுவர். பின்னர் நெருப்புத் தணலில் சாம்பிராணி போட்டு, அந்தப் புகையை குடைந்து எடுத்த கண்ணின் வழியாக உள்ளே விட்டு நீர்ப் பசை முற்றிலுமாக போகும்படி செய்வார்கள். பிறகு திறந்திருக்கும் கண் பகுதியை, சிறிய ‘கார்க்’ கொண்டு அடைத்து தனியாக வைத்திருப்பார்கள்.

தொடர்ந்து இருமுடி கட்டும் நாளன்று, கார்க்கை அகற்றி தேங்காய்க்குள் பசுவின் நெய்யை அடைத்து மீண்டும் ‘கார்க்’ கொண்டு மூடிவிடுவார்கள். பசுவின் நெய்யானது, விஷ்ணுவின் சொரூபம். இப்படி அடைக்கப்பட்ட நெய் தேங்காயை, பிரம்மாவினால் படைக்கப்பட்ட ஜீவாத்மாவான மனித சொரூபம் தன்னுடைய தலையில் சுமந்தபடி, மும்மூர்த்திகளின் சொரூபமான சபரிமலை ஐயப்பனை நாடிச் செல்வதை உணர்த்தும் தத்துவமே இதுவாகும். சிவ-விஷ்ணு- பிரம்ம சொரூபமாக சுமந்துவரப்பட்ட நெய்யை, ஞான மூர்த்தியாக இருக்கும் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதன் மூலம் மும்மூர்த்தி சொரூபமான ஐயப்பனின் அருளைப்பெற்று, பாவங்களை தொலைத்து மோட்ச நிலையை அடையலாம் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News