ஆன்மிகம்
புத்தர்

அவமரியாதையை ஏற்க வேண்டாம்- ஆன்மிக கதை

Published On 2020-07-09 07:09 GMT   |   Update On 2020-07-09 07:09 GMT
ஆன்மிகத்தை முழுமையாக உணர்ந்துஅறிந்தவர்களை, இன்பமும் துன்பமும், பாராட்டும் அவமரியாதையும் ஒன்றும் செய்வதில்லை. இதை புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு கதையின் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.
இன்பங்களைப் போலவே துன்பங்களும் வாழ்வில் உண்டாகும். ஆனால் இன்பங்களை மகிழ்வாக வரவேற்கும் நமக்கு, துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் ஏராளமான அவமானங் களை சந்திக்கவே செய்வார்கள். அது அவர்களின் மனதை மிகவும் பாதித்து விடுகிறது. அதனால் நிலைகுலைந்து, வாழ்வையே இழந்துவிட்டதாகக் கருதுபவர்களே இங்கு ஏராளம். இன்பங்களையும், துன்பங்களையும், மரியாதையையும், அவமரியாதையையும் சரிசமமாக ஏற்பது எப்படி என்பதைத்தான் ஆன்மிகம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

ஆன்மிகத்தை முழுமையாக உணர்ந்துஅறிந்தவர்களை, இன்பமும் துன்பமும், பாராட்டும் அவமரியாதையும் ஒன்றும் செய்வதில்லை. இதை புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு கதையின் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.

புத்தர் தன்னுடைய கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடியது. ஒரு சிலர் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர், அவரது கருத்தை ஏற்காததுடன் ஏளனமாக, அவமரியாதையாக பேசவும் செய்தனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒரு சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவார், புத்தர்.

ஒருநாள் அவர் ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கு தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபன், புத்தரை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். சாதாரணமான ஒருவன் அந்த வார்த்தைகளைக் கேட்டால், அங்கு அசம்பாவித சம்பவங்கள்தான் நிகழும். ஆனால் எதிரில் இருப்பவர் புத்தர் ஆயிற்றே.. அவரது முகத்தில் புன்னகையைத் தவிர வேறு எந்த முகபாவனையும் தென்படவில்லை.

புன்னகையோடே தன்னைத் திட்டிய வாலிபரை, தன் அருகில் வரும்படி அழைத்தார், புத்தர். ‘இவர் நம்மை என்ன செய்துவிடப்போகிறார்’ என்று நினைத்த அந்த வாலிபனும் புத்தரின் அருகில் போய் நின்றான்.

அவனை தன் பக்கத்தில் அமரும்படி சொன்னார் புத்தர். பின்னர் அவனிடம், “நண்பரே.. நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவரைப் பார்க்கச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த வாலிபன், “ஆமாம்.. பழங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வேன்” என்று பதிலளித்தான்.

“அப்படி நீங்கள் வாங்கிச் செல்லும் பழங்களை, நீங்கள் காணச்சென்றவர் உங்களிடம் இருந்து வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அந்தப் பழங்களை என்ன செய்வீர்கள்” என்றார், புத்தர்.

“நான் வாங்கிச் சென்ற பழங்களை, என்னுடனே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவேன்” என்றான், அந்த வாலிபன்.

அப்போது புத்தர் அதே புன்னகையுடன் கூறினார். “அதைத்தான் இப்போது நீங்கள் செய்யப்போகிறீர்கள். திட்டுவது என்பது உங்கள் சுதந்திரம். அதை ஏற்பதும், ஏற்காததும் என்னுடைய சுதந்திரம். நீங்கள் என்னை அவமதித்துப் பேசிய பேச்சுக்களை நான் ஏற்கவில்லை. எனவே பழங்களை திரும்ப எடுத்துச் செல்வதுபோல, உங்களுடைய வசைபாடலையும் உங்களுடனேயே திரும்ப எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட அந்த வாலிபன் வெட்கித் தலைகுனிந்தான். தன் தவறை உணர்ந்து, உடனடியாக புத்தரின் பாதத்தை வணங்கி, மன்னிப்புக் கேட்டான். பின்னாளில் அவன் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் சீடனாகவும் மாறிப்போனான்.
Tags:    

Similar News