ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் கோவிலில் ஆடித்திருக்கல்யாண விழா நடைபெறுமா?

Published On 2020-07-08 06:13 GMT   |   Update On 2020-07-08 06:13 GMT
கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருக்கல்யாண திருவிழா ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் 17 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டின் ஆடித்திருக்கல்யாண திருவிழா வருகிற 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்த திருக்கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி வருகிற 15-ந் தேதி அன்று காலை 10.30 மணியில் இருந்து 12 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி அன்று ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 31-ந்தேதி சாமி-அம்பாள் கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர்பாத மண்டகபடிக்கு செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.

இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம், தேரோட்டம், திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழா விவரங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதியை பொறுத்தே திருவிழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினர். கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் கடந்த 105 நாட்களுக்கு மேலாக ராமேசுவரம் கோவிலின் அக்னிதீர்த்த கடற்கரை, சன்னதி தெரு மற்றும் ரத வீதிகளின்சாலை முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.
Tags:    

Similar News