ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2020-07-04 06:06 GMT   |   Update On 2020-07-04 06:06 GMT
பழனி முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும், மக்கள் பசி, பிணியின்றி வாழவும் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. கோவிலின் பாரவேல் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டும், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, சங்கு பூஜை, வேதபாராண்யம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதன்பிறகு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூஜைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் விபூதி நிறுவனத்தினர் செய்திருந்தனர். மேலும் இன்று (சனிக்கிழமை) திருஆவினன்குடி கோவிலும், பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளையும், பெரியாவுடையார் கோவிலில் நாளை மறுநாளும் பக்தர்கள் இன்றி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News