ஆன்மிகம்
தென்தாமரைகுளம் அருகே புளியன்குளத்தில் விநாயகர் கோவிலில் நேற்று பூஜை நடந்த போது எடுத்த படம்.

300 கிராம கோவில்களில் வழிபாடு: சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி கும்பிட்டனர்

Published On 2020-07-02 06:43 GMT   |   Update On 2020-07-02 06:43 GMT
குமரி மாவட்டத்தில் 300 கிராம கோவில்களில் வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி கும்பிட்டனர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது மேலும் பரவாமல் தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கோவில்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில் 5-வது ஊரடங்கு முடிந்து 6-வது ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோவில்கள் அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களில் மட்டும் பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அரசு அறிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடந்தது. அதே போல் குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களில் நேற்று நடை திறக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி அருகே வடக்கு தாமரைகுளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட புளியன்குளம் ஆனந்த விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றி சாமி கும்பிட்டனர். இதே போல் ஆலயங்கள், பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டன.

குமரி மாவட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 653 கிராம கோவில்கள் உள்ளன. அவற்றில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களை மட்டுமே திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி குமரி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு கால பூஜை நடைபெறும் 300 கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி கும்பிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் கூனாலுமூடு அம்மன் கோவில், உதயமார்த்தாண்டம் விநாயகர் கோவில் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவர் பக்தர்களும், பூசாரியும் முக கவசம் அணிந்துள்ளார்களா? சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

100 அடி நீளம் இடம் உள்ள கோவில்களில் ஒரே நேரத்தில் 20 பேர் நிற்க வேண்டும் என்றும், முககவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் பக்தர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்று உதவி ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் பூசாரிகளிடம் அறிவுறுத்தினார். 
Tags:    

Similar News