ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா இன்று மாலை தொடக்கம்

Published On 2020-07-01 09:02 GMT   |   Update On 2020-07-01 09:02 GMT
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவை காண காரைக்கால் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காகவும், விழாவில் சிவாச்சார்யார்களின் இடைவிடாத பணிச்சுமையை குறைக்கவும் கடந்த ஆண்டு முதல் 4 நாள் நடைபெறும் திருவிழா, 5 நாட்களாக மாற்றப்பட்டது.

இந்த ஆண்டும் அதே 5 நாள் விழா நடைபெறவுள்ளது. அதன்படி இன்று (புதன் கிழமை) மாலை 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் மாங்கனித் திருவிழா தொடங்குகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணமும், 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.

4-ந் தேதி காலை 11 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும், அது சமயம் பக்தர்கள் மாங்கனி வாரி இறைக்கும் நிகழ்ச்சியும், அன்று பிற்பகல் 12.15 அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு திருவிழா முழுவதும், பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் கோவிலுக்குள்ளேயே நடைபெறும் என கோவில் அறங்காவல் குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News