ஆன்மிகம்
சிவபெருமான் மகிழ்ச்சி அடைய... சங்கும்.. துளசியும்..

சிவபெருமான் மகிழ்ச்சி அடைய... சங்கும்.. துளசியும்..

Published On 2020-06-30 08:44 GMT   |   Update On 2020-06-30 08:44 GMT
சங்கில் தீர்த்தம் நிரப்பி, அதன் மேல் துளசி இலைகளை வைத்து அபிஷேகம் செய்தால், சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து வேண்டிய வரங்களைத் தருவார்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதிலும் சங்கு கொண்டு நடத்தப்படும் அபிஷேகம் அவருக்கு பிடித்தமானது. அதனால்தான் சிவன் ஆலயங்களில் 108, 1008 என்ற வகையில் சங்கில் நீர் ஊற்றி வைத்து, அதைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். சங்கில் தீர்த்தம் நிரப்பி, அதன் மேல் துளசி இலைகளை வைத்து அபிஷேகம் செய்தால், சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து வேண்டிய வரங்களைத் தருவார். சங்கு, துளசி, சாளக்கிராமம் ஆகிய மூன்றையும் இல்லத்தில் வைத்து வழிபடுபவர்களுக்கு, முக்காலமும் உணரும் ஞானம் கிடைக்கும். சலக சவுபாக்கியங்களும் வந்து சேரும்.

துளசியில் தேவர்களும், புண்ணிய தீர்த்தங்களும் வசிக்கின்றனர். புஷ்கரம் முதலான தீர்த்தங்களும், கங்கை முதலான புண்ணிய நதிகளும், தேவர்களும் துளசியில் வாசம் செய்கின்றனர். அப்படிப்பட்ட துளசியை நாம் வழிபாடு செய்வதால், தேவர்களையும், புண்ணிய தீர்த்தங் களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இதுதவிர தேவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவரும், மும்மூர்த்திகளில் ஒருவருமான பிரம்மதேவன் கூட, ஒவ்வொரு துவாதசி திதி அன்றும் துளசியை வழிபாடு செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் துளசியை வைத்து வேறு எந்த தெய்வங் களையும் வழிபடுவதில்லை. துளசியை மகாலட்சுமியாக பாவித்து வழிபாடு செய்கிறார்.

துளசிதேவி, திருமாலின் மார்பில் மாலையாக வீற்றிருக்கிறாள். துளசியை மாலையாக அணிந்து கொண்டதால் பெருமாளுக்கு அழகு, அதுவே துளசிக்கு பெருமை. “துளசி தீர்த்தம் கொண்டு என்னை அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமுதக் குடங்களால் அபிஷேகம் செய்ததைப் போல நான் மகிழ்ந்துபோகிறேன்” என்று மகாவிஷ்ணுவே கூறுகிறார். இதில் இருந்தே துளசியின் மகத்துவத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். துளசி பூஜை செய்ய, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் துவாதசி திதியும் சிறப்பு வாய்ந்தவை.
Tags:    

Similar News