ஆன்மிகம்
வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி அளிப்பதையும், பக்தர்கள் இன்றி பாலாபிஷேகம் நடப்பதையும் காணலாம்.

திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாகம்: 10 மணி நேரம் நடக்கும் பாலாபிஷேகம் 45 நிமிடங்களில் முடிந்தது

Published On 2020-06-05 05:43 GMT   |   Update On 2020-06-05 05:43 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாகம் அன்று 10 மணி நேரம் இடைவிடாது நடக்கும் பாலாபிஷேகம் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் வெறும் 45 நிமிடங்களில் முடிந்தது. பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லாததால் அரோகரா கோஷமும் ஒலிக்கவில்லை.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முதல் படை வீடாகும். அழகர் கோவில் மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவில் 6-வது படை வீடாகும்.

இந்த கோவில்களில் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் மட்டும் தான் வள்ளி, தெய்வானை சமேத சண்முக பெருமான் தன் இருப்பிடமான சண்முகர் சன்னதியைவிட்டு விசாக கொறடு மண்டபத்திற்கு இடம் பெயருவார். இது இந்த திருவிழாவின் தனி சிறப்பாகும்.

வள்ளி, தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கு அதிகாலையில் இருந்து மாலை வரை சுமார் 10 மணி நேரம் இடைவிடாது குடம், குடமாக நடைபெறும் பாலாபிஷேகம் நேற்று 45 நிமிடத்தில் முடிந்தது. அதோடு திருவிழா நேற்று பக்தர்கள் இன்றி, அரோகரா கோஷம் இல்லாமல் நடந்தது.

இருப்பினும் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது. வரலாற்றிலே முதன் முறையாக இந்த ஆண்டில்தான் விசாக திருவிழா இப்படி எளிமையாக நடைபெற்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்த போதிலும் பக்தர்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் வந்து கோவில் வாசலில் மூடப்பட்ட கதவில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் செய்து முருகப் பெருமானை வழிபட்டனர். ஒரு சிலர் பால்குடம் எடுத்து மூடப்பட்டுள்ள கதவு வழியே கோவிலுக்குள் ஊற்றி தாங்களே அபிஷேகம் செய்தனர். இன்னும் சில பக்தர்கள் பூ மற்றும் பூ மாலையை கதவில் போட்டு சாமி கும்பிட்டனர். இது தவிர கோவில் வாசல் முன்பு சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
Tags:    

Similar News