ஆன்மிகம்
மன அமைதிக்கு நேர்மறை ஆற்றல் அவசியம்

மன அமைதிக்கு நேர்மறை ஆற்றல் அவசியம்

Published On 2020-05-23 08:34 GMT   |   Update On 2020-05-23 08:34 GMT
மன அமைதியே நமக்கு வெற்றியைத் தேடி தரும். ஒரு தெளிவான மனநிலையில் இருந்து, எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும்போது, அது உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
உலகில் மனிதராய் பிறந்த அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும் போது சில நிலைகளில் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் ஏற்படுகிறது.

இந்த முயற்சியில் ஒரு சிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு, எதிர்மறை சிந்தனை மிகுதியாகிவிடும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஒருவர் மிகுதியான எதிர்மறை எண்ணங்களோடு வாழ்வதற்கு ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.

ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ம் அதிபதியான, அஷ்டமாதிபதியே மிகுதியான நேர்மறை எண்ணத்தை மனிதனுக்கு தூண்டுபவர். எனவே லக்னம் வலிமையாகவும், அஷ்டமாதிபதி வலிமை குறைவாகவும் இருக்க வேண்டும்.

லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு, அஷ்டமாதிபதி மற்றும் பாதகாதிபதி சம்பந்தம் இருந்தால், அவர்களிடம் எதிர்மறை எண்ணம் மிகுதியாக இருக்கும்.

ஜனன கால ஜாதகத்தில் 1, 3-ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் ராகு - கேது, சனி ஆகிய கிரகங்கள், இயற்கையாகவே ஒருவருக்கு எதிர்மறை எண்ணத்தை மிகுதியாக்கி, தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தும்.

1, 3-ம் இடத்திற்கு, வக்ரம், அஸ்தமனம், நீச்சம் பெற்ற கிரகங்கள் சம்பந்தம் பெற்றால், வாழ்நாள் முழுவதும் சுயமாக சிந்திக்கும் திறன் அவரிடம் இருக்காது. எதிர்மறை எண்ணத்துடன் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருப்பார்.

கோட்சார ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போதும், ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும் போதும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்ம ராகு, கேது ஆகிய காலகட்டங்களில் எதிர்மறை சிந்தனை அதிகம் உருவாகும்.

கடைப்பிடிக்க வேண்டியவை

உளவியல் ரீதியாக நேர்மறை எண்ணம் மிகுதியாகுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை பார்க்கலாம்..

திட்டமிடுதல்

நாம் செய்யும் செயல்கள் பெரியதோ, சிறியதோ, அதனைச் சரியாக திட்டமிடுதல் மிகவும் அவசியம். சிலர், செயல்களில் அலட்சிய மனோபாவம், மெத்தனப் போக்கு காட்டி, அதனால் பாதகமான விளைவை உணரும் போது நொறுங்கிப் போவார்கள். முறையான திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம்.

தன்னம்பிக்கை

முறையான திட்டமிடுதலுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் மிக முக்கியம். ‘என் முயற்சி பலிக்குமா?’ என்ற அவநம்பிக்கை ஏற்பட்டாலே, அது பலிதமாகாது.

அவசரம்

விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி சூரிய வெளிச்சம் பட்டவுடன் செடி வளராது. நாம் விதைத்த விதையின் தரம், விதைத்த இடம், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பொறுத்து, செடி வளர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இதே போல் தான் மனித வாழ்க்கையும். செய்த செயல் வடிவாக்கம் பெறும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.

மன அமைதி

நல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் மனிதனின் மனதில் இருந்துதான் தோன்றுகின்றன. அதாவது எண்ணங்களின் ஆரம்ப ஸ்தானம், மனம். ஆழ்மனதில் அழுத்தமான, அமைதியான எண்ணம் இருந்தால் மட்டுமே மன அமைதி கிடைக்கும்.

மன அமைதியே நமக்கு வெற்றியைத் தேடி தரும். ஒரு தெளிவான மனநிலையில் இருந்து, எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும்போது, அது உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

Tags:    

Similar News