ஆன்மிகம்
சாமிதோப்பில் வைகாசி திருவிழா கொடியேற்றம் எளிமையாக நடந்ததை படத்தில் காணலாம்.

சாமிதோப்பில் வைகாசி திருவிழா தொடங்கியது

Published On 2020-05-23 06:26 GMT   |   Update On 2020-05-23 06:26 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம் எளிமையாக நடந்தது. குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று கொடியேற்ற நிகழ்ச்சியை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி மாதங்களில் 11 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வைகாசி திருவிழா, கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் நேற்று தொடங்கியது. அதாவது அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி எளிமையான முறையில் காலையில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றுவதற்காக 5 பேர் மட்டும் தலைமைப்பதிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், அய்யாவுக்கு பணிவிடையும், 5 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. கொடியை பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். தலைமை பதியின் வெளிப்பகுதியில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று கொடியேற்ற நிகழ்ச்சியை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தலைமை பதியின் முன்பகுதியில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் உச்சிப்படிப்பும், இரவு யுகப்படிப்பும் நடந்தது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜாண்கென்னடி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவு பணிவிடையும், நண்பகல் உச்சி படிப்பும், இரவு யுகப்படிப்பும் நடக்கிறது.
Tags:    

Similar News