ஆன்மிகம்
பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை.

பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய ராமேசுவரம் கடற்கரை

Published On 2020-05-23 04:24 GMT   |   Update On 2020-05-23 04:24 GMT
சர்வ அமாவாசை தினமான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அகில இந்திய அளவிலான புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் சிறப்புகளில் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் முக்கியமானவை.

ராமேசுவரம் கோவிலில் சாதாரண நாட்களை விட ஆடி மாதம், தை அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் மாதம்தோறும் வரும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். முன்னோரை வழிபட மற்ற நாட்களை விட அமாவாசை நாட்கள் உகந்தது என ஐதீகமாக சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம் அக்னி தீர்த்த கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோரின் ஆசி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை இந்த தடை உள்ளது. இந்த நிலையில் வைகாசி மாத சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதி மற்றும் கோவில் பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இது பற்றி அக்னிதீர்த்த கடற்கரை புரோகிதர் சங்கத்தின் பொருளாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

ராமேசுவரம் வரும் பக்தர்களை நம்பியே அக்னி தீர்த்த கடற்கரையில் 50 புரோகிதர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அது போல் ராமேசுவரம் பகுதியில் வீடுகளில் வைத்து 100-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் பூஜை செய்கின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கினால் கடந்த 2 மாதமாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ் ஓடாததால் ராமேசுவரத்துக்கு எந்த பக்தர்களும் வரவில்லை. இதனால் வருமானம் இழந்து தவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News