ஆன்மிகம்
வெள்ளியங்கிரி

ஐந்து மலையாக மாறிய சிவன்

Published On 2020-04-09 10:29 GMT   |   Update On 2020-04-09 10:29 GMT
கொங்குநாட்டின் மேற்கு எல்லையில் சிவபெருமானின் திருவுருவாக விளங்குவது, தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை.
திருவண்ணாமலையில் சிவனே மலையாக வீற்றிருக்கிறார் என்கிறது புராணம். கொங்குநாட்டின் மேற்கு எல்லையில் சிவபெருமானின் திருவுருவாக விளங்குவது, தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை.

சிவபெருமான் பஞ்ச லிங்கமாக திகழும் இந்த திருத்தலமானது, ‘ரசதகிரி’, ‘தட்சிண கயிலாயம்’, ‘பூலோக கயிலாயம்’ என்றெல்லாம் பெயர் பெற்று விளங்குகிறது.

சிவபெருமானின் மீது கோபம் கொண்ட தட்சன், தான் நடத்திய வேள்விக்கு ஈசனையும், உமைய வளையும் அழைக்கவில்லை. மாறாக மற்ற தெய்வங்களையும், தேவர்கள் மற்றும் முனிவர்களையும் அழைத்தான். தன் கணவனுக்கு அழைப்பில்லாததை கேட்கும்பொருட்டு, யாக சாலைக்கு சென்று உமையவளுக்கு அவமானமே நிகழ்ந்தது. இதையடுத்து பார்வதிதேவி, யாக குண்டத்தில் விழுந்து உயிர் துறந்தாள்.

இதனால் சினம் கொண்ட ஈசன், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்தார். மேலும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் சாபம் கொடுத்தார். பின்னர் தன்னுடைய ஐந்து முகங்களையும், ஐந்து மலைகளாக மாற்றிக்கொண்டு கொங்கு நாட்டில் போய் மறைந்துவிட்டார்.

சாபத்தால் தவித்துக் கொண்டிருந்த தேவர்கள், சிவபெருமானைத் தேடி அலைந்தனர். இடையில் நவக்கிரக தோஷம் நீங்கி, பழனி கன்னிகா வனத்தில் புரட்டாசி மாதம் ஐந்து வாரம் தவம் இயற்றினர். ஐப்பசியில் ஐந்து வாரம் பவானியில் துலா முழுக்கு செய்தும், கார்த்திகையில் ஐந்து வாரங்கள் மேற்கண்ட ஐந்து மலைகளையும் வழிபட்டும் பேறு பெற்றனர்.

முடிவில் அவர்களுக்கு வெள்ளியங்கிரியில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். இங்கு தீராத நோய் தீர்க்கும் ‘ஆண்டி சுனை’ தீர்த்தம் உள்ளது. அர்ச்சுனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றதும், முக்தி பெற்றதும் இத்தலமே என்று புராண வரலாறு கூறுகிறது.
Tags:    

Similar News